Monday 6th of May 2024 11:43:27 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிழக்கில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புகள் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்!

கிழக்கில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புகள் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்!


கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படக்கூடிய கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன் மற்றும் இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் வினோத் ஜேக்கப் ஆகியோரிடையே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்திய இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடமை குறித்த நோக்குகள் தொடர்பாகவும் இரு தரப்பினரும் தமது கருத்துக்களை பரிமாறியுள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் டாக்டர் அமல் ஹர்ஷ டி சில்வா, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு பிரிவின் தலைமை அதிகாரி எல்டோஸ் மத்தியூ புண்ணூஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த ஜனவரியில் கொழும்புக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் இந்திய அரசாங்கம் எப்பொழுதும் உறுதியான ஈடுபாட்டினை கொண்டிருக்கின்றமையுடன், இந்திய முதலீட்டாளர்களின் வருகையால் கிழக்கு மாகாணத்தில் பாரிய அளவில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் கிட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2016ஆம் ஆண்டில் பூர்த்திசெய்யப்பட்ட 45000 வீடுகளை கொண்ட இந்திய வீடமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் கிழக்கு மாகாணத்திலும் கணிசமான எண்ணிக்கையிலான வீடுகள் வழங்கப்பட்டிருந்தது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்த அவசர அம்புலன்ஸ் சேவையானது 2018ஆம் ஆண்டின் பின்னர் கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்குள்ளான மீனவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் மொத்த பெறுமதியில் ஏரிகள் மற்றும் கடலில் மீன்பிடிப்பதற்கான சிறுபடகுகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் குளிர்சாதன வசதியுடனான வாகனங்கள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு மேலதிகமாக இதுவரையில் செயற்பாட்டில் இருக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பிற்கு இடையிலான ரயில் பஸ் சேவைக்குரிய ஐந்து அலகுகள் இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

மேலும் மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தூரப் பிரதேசங்களையும் மலைப்பாங்கான பகுதிகளையும் நெடுஞ்சாலைகளுடன் இணைப்பதற்காக 150 மில்லியன் இலங்கை ரூபா மொத்த பெறுமதியில் 85 பஸ்கள் ஏனைய மாகாணங்களுடன் கிழக்கு மாகாண சபைக்கும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE